சென்னைக்கு சியர்ஸ்: சாவுக்கு சரக்கடிக்கும் நகரம்

Humour

சென்னைக்கு சியர்ஸ்: சாவுக்கு சரக்கடிக்கும் நகரம்

Illustration: Mudit Ganguly

“இத்தையா பார்ட்டின்னு சொல்றீங்க?”

என் டிரைவர் பிரகாஷ் இப்படிக் கேட்டபோது, நான் ரம் சகதியில் தவழ்ந்துகொண்டு இருந்தேன்.

“ஆமாம், கொஞ்சம் கலீஜா இருக்கில்ல?” குட்டி டைனோசர் மென்றுபோட்டதைப்  போல இருந்த மிருக உடலின் பாகத்தை கையில் பிடித்தபடி அவனைப் பார்த்துச் சொன்னேன்.

முந்தைய இரவின்  மிச்சம் மீதியைக் கண்ணாலே அளந்தான் பிரகாஷ். எங்கள் விருந்தினர்கள்: அதிர்ஷ்டவசமாக  வயதின் காரணமாக மூத்தவர்களாகி, வேலைக்குவந்து, வீடும் காரும் வாங்கி, குழந்தைகளும் பெற்றுக்கொண்டுவிட்ட ஆனால் கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ளாத நண்பர் பட்டாளம்.

விருந்தினர்களின் பயன்பாட்டுக்கான கழிப்பறையின் கதவைத் திறந்தான். குமட்டிக்கொண்டு வந்ததை சாமர்த்தியமாக சமாளித்துவிட்டு அனுதாபமும் ஏளனமும் கலந்த பார்வையொன்றை என்மீது வீசினான்.

சற்றே தள்ளி நின்றுகொண்டிருந்தாள் என் மனைவி. மிகுந்த பரிவுடன் என்னை நடத்தியதற்கு அவளுக்கு நான் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். இந்த மாதிரி நிகழ்வுகளின்போது இம்மிபிசகாமல் துல்லியமாக அவள் என்மீது சொடுக்கும் சாட்டைவாரை பிரகாஷின் கண்ணுக்குத் தெரியாதவாறு பின்னால் மறைத்துப் பிடித்திருந்தாள்.

“நான்சென்ஸ், இதெல்லாம் ஒன்னுமேயில்லை சார். நிஜமான பார்ட்டி பார்க்கணுமா, எங்கூட வா, காட்டறேன்,” என்றான்.

வெகு சீக்கிரத்திலேயே வந்தது அந்த நாள். நான் எதிர்பார்த்ததுபோல பிறந்தநாள் விழாவோ, திருமண நிகழ்வோ, ஏதோ ஒரு பாவப்பட்ட பெண்குழந்தையின் மஞ்சள் நீராட்டு விழாவோ இல்லை. அது ஒரு சாவு.

போனின் மறுமுனையிலிருந்து பேசினான் பிரகாஷ். அவனுடைய ஏரியாவின் “மாமாவான” பெயின்டர் பாண்டி இறந்துவிட்டாராம். தனக்கு விடுப்பு வேண்டுமென்று கேட்டதோடு சாவு வீட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பும் விடுத்தான்.

“நீ வைக்கிறது எல்லாம் மொக்கை பார்ட்டி சார்,” என்னைக் கிண்டலடிக்கிறான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. “பார்ட்டின்னா என்னன்னு இங்கே வந்து பாரு.”

சுமார் இருபது நிமிடங்கள் ஆட்டோவில் பயணித்த பின்னர் அடித்தட்டு மக்களால் செழித்துவளர்ந்த சுற்றுச்சூழலைக்கொண்ட, இரண்டு ஏரியாக்களின் நட்டநடுவில் அமைந்து ஒரு சதுர அடி ரூ. 17,000-க்கு விலைபோய்க்கொண்டிருந்த, தொண்டாங்குப்பத்தின் முனையை அடைந்தேன். இதுபோன்ற ஏரியாக்களில் வழக்கமாக காணப்படும் ஒரு சின்னஞ்சிறிய வரவேற்பு வளைவும் அதன்மேலே பல வண்ணக் காகித முக்கோணத் தோரணங்களும் மாறாமல் இங்கும் இடம்பெற்றிருந்தன.

அச்சுறுத்தும் வகையில் இடுப்புக்குக் கீழே இறங்கியிருந்த லோ வெயிஸ்ட் ஜீன்ஸ் அணிந்த இரண்டுபேர் 4க்கு 6 அடியில் எழுதப்பட்டிருந்த பேனர் ஒன்றைத் தூக்கிக் கட்டிக்கொண்டிருந்தனர். அதில் ஒடுங்கிய கன்னங்களுடன் அதிதீவிர கிளோஸ்-அப்பில் தெரிந்த அந்த பண்பாளரின் இரு புறத்திலும் ஆளுயர சைஸில் தமிழ் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டார்களான  அஜித்தும் விஜய்யும் இருந்தனர்.

ரவி வர்மா ஓவியத்தைக் காப்பியடித்து வரையப்பட்ட மார்புக்கச்சையணிந்த யுவதி ஒருத்தி பெயர் எழுதப்படாத அந்தப் புகைப்படத்தில் இருந்த மனிதரின்மீது ரோஜா இதழ்களைச் சொரிந்து கொண்டிருந்தாள். மீதமிருந்த இடத்திலெல்லாம் வெவ்வேறு நிறத்திலும் அளவிலும் அமைந்த பலவிதமான எழுத்துருக்களில் வார்த்தைகளை இட்டு நிரப்பியிருந்தார்கள். தமிழில் இருந்ததாலும், பிராந்திய கொல்டிக்களின் பாரம்பரிய வழக்கப்படி நான் தமிழில் எழுதவோ படிக்கவோ  கற்றுக்கொள்ளாததாலும்  என்ன எழுதியிருந்தது என்பதை துரதிர்ஷ்டவசமாக என்னால் படிக்கமுடியவில்லை.

பேனருக்குக் கீழே ஒளிவீசும் முகத்துடன் நின்றுகொண்டிருந்தான் பிரகாஷ். “இதுல என்ன எழுதியிருக்கு?” பேனரைச்  சுட்டிக்காட்டியபடி கேட்டேன். கவனமாக பேனரைப் படித்தான் பிரகாஷ்.

பாண்டி தொலைநோக்குப் பார்வையில்` இராஜராஜனைப் போலவும் கொடையில் கர்ணனைப் போலவும் கருணையில் அன்னை தெரேசாவைப் போலவும் சைக்கிள் ஓட்டுவதில் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கைப் போலவும் இருந்தார் என்றும் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதினார்கள் என்றும் எழுதியிருக்கு.

“அட, இந்த மனிதர் பாண்டி என்ன செய்தார்?” என்று கேட்டேன்.

“பெயிண்டர்” என்றான் பிரகாஷ்.

“என்ன பாணி பெயின்டிங்? உணர்வுசார்ந்தவை, பின் நவீனத்துவம் போன்றவற்றில் எது?

“சுவர் ஓவியம், பெயர்ப்பலகை, அடையாளப் பலகை,” என்றான் பிரகாஷ்.

“அவரை எல்லாருக்கும் தெரியுமா?”

“ம்ம்ம் தெரியுமே, டாஸ்மாக் கடையில்.”

இறந்துபோன பெயிண்ட்டரின் சின்னஞ்சிறிய வீட்டின் முகப்பில் இருந்த ஒரு பெஞ்சியில் உட்கார்ந்திருந்தவர்களுடன் நெறுக்கியடித்துக்கொண்டு நானும் அமர்ந்துகொண்டேன். இறந்துபோனவருக்கு ஆடை அலங்காரம்செய்து ஒரு நாற்காலியில் அமரவைத்து இறுக்கமாகக் கட்டிவைத்து இருந்தார்கள். அவருடைய முகத்தில் இருந்த புன்னகையையும் நெற்றியில்  பளபளத்த ஒரு ரூபாய்க் காசையும் பார்த்தபோது அவர் இப்போதைக்குக் கிளம்புவார் என்று தோன்றவில்லை.

அவரைச் சுற்றி பத்துப் பதினைந்து பெண்கள் கூடி உட்கார்ந்து ஐந்தைந்து பேராக ஒன்று சேர்ந்து நெஞ்சிலடித்துக்கொண்டு உரத்த குரலில் ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்கள். அழுகையினூடே பேனரில் எழுதப்படாத பாண்டியனின் வேறுபல நற்குணங்களையும் எடுத்துச்சொல்லிக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் அதிகார மையமாக இருந்த தற்காலிக மதுபானக் கடையைப்  பிரகாஷும் அவனுடைய கூட்டாளிகளும் திறம்பட நிர்வகித்தனர். விமானத்திலிருந்து எறியப்படும் உணவுப்பொட்டலங்களைப் பிடிப்பதற்காக கைநீட்டி நிற்கும் அகதிகளைப்போல அவர்களைக் சுற்றி  நின்றுகொண்டிருந்தது ஒரு கூட்டம். எந்தப் பருவத்தில் தயாரிக்கப்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் இல்லாத சரக்கினால் பிளாஸ்டிக் கப்புகள் நிறைக்கப்பட்டு வெகு விரைவிலேயே அதிக சிரமமின்றி உறிஞ்சப்பட்டுக் காலியாகி மீண்டும் நிறைக்கப்படுவதற்காக இடைவிடாமல் நீட்டப்பட்டுக்கொண்டேயிருந்தன.

அவ்வப்போது ஒரு சின்ன இடைவெளி கிடைக்கும்போது அவர்களில் சிலபேர் ஒப்பாரி வைப்பவர்களோடு சேர்ந்து சில விநாடிகள் ஓலமிட்டு அழுதுவிட்டு மீண்டும் தங்களுடைய கடமையைச்செய்ய வந்துவிட்டார்கள். தப்பட்டையடிப்பவர்கள் மூன்று பேர் சாவு வீட்டுக்கான மெட்டை இடைவிடாமல் தங்களுடைய மெல்லிய மேளத்தில் வாசித்துக்கொண்டிருந்தார்கள். தெருவில் உறைந்துபோய் நின்ற போக்குவரத்தை வேடிக்கை பார்த்தபடி பிளாஸ்டிக் சேர் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு பிரியாவிடையளிப்பதற்கான அந்த மதுபானத்தின் முதல் துளியை உறிஞ்சினார் போலீஸ்காரர் ஒருவர்.

அந்தக்  குறுகிய சந்தின் நட்டநடுவே ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஆனால் ஓரினத்தம்பதிகளல்லாத இருவர் கட்டியிருந்த லுங்கியின் முனையைத் தூக்கிப் பல்லிடுக்கில் கவ்விப்பிடித்தபடி இடுப்பை முடிந்தவரை முன்னே தள்ளி சாவுக்குத்தை ஆட முனைந்தபோது பிளாஸ்டிக் கப்பை என்னிடம் எடுத்துவந்தான் பிரகாஷ்.

கரும்பழுப்புநிற திரவத்தின் மேலே மல்லாந்து கிடந்த ஈ, பெரும்பாலும் உள்ளே விழுந்தவுடன் இறந்துபோயிருக்கக்கூடும். மூன்று விரற்கடையளவு இருந்த மதுபானத்தின் நெடி அது நான் ஒரு வாரமுழுவதும் அருந்துவதைக் காட்டிலும் அதிக வீரியமுள்ளது என்பதைச் சொல்லிற்று. நான் முழிப்பதைக் கவனித்த பிரகாஷ் இன்னொரு கிளாசை எடுத்துவருகிறான். ஈ இல்லாதது.

“சாப்பிடுங்க சார், இல்லேன்னா வருத்தப்படுவாங்க,” என்றான்.

ஏற்கனவே ஆட்டத்திற்கு அழைத்த ஒருவரை மறுத்துவிட்டிருந்தேன், மீண்டும் அவர்களை கவலையில் ஆழ்த்த மனமில்லை. ஒரு சின்ன உறிஞ்சல்தான். மைக் டைசனின் குத்தைப்போல கல்லீரலில்பட்டு நெருப்பாக எரிந்தது.

இரண்டாவது கிளாசை இறக்கியதும் எல்லா ஆண்களும் தெருவிலே இருந்தனர், என்னையும் சேர்த்துத்தான். உட்கார்ந்த நிலையிலிருந்த பாண்டியை வானத்திலிருந்த அந்த மிகப் பெரிய மதுபானக்கடைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த டாப்பில்லாத டெம்போ ஒன்றின் பின்னே போய்க்கொண்டிருந்தோம். ரோஜா மாலையொன்றைப்  பிய்த்து பூக்களை வழிநெடுகிலும் தூவிக்கொண்டே வந்தார் அதற்கென்றே நியமிக்கப்பட்ட ஒருவர்.

லுங்கியில்லாமல் குத்தாட்டம் ஆட முனைந்தால் டுட்டு உடையணியாமல் பாலே நடனமாடும் ஆட்டக்காரரைப்போல சுரத்தேயில்லாமல் இருக்கும் என்று தெரியும். இருந்தாலும் எவ்வளவு நேரம்தான் சுவற்றுப்பல்லியைப்போல வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டிருப்பது. திருவாளர் சங்குமணியின் (தச்சுவேலை செய்பவர்)அழைப்பையேற்று தினமும் காலையில் ஸ்லோகம்சொல்லவேண்டுமென்று பயிற்றுவித்த நான் பெற்ற வித்யா விஹார் கல்வி அனுமதித்தவரை  என்னால் முடிந்த அளவுக்கு அநாகரிகமாக ஆடத்துவங்கினேன். மனதுக்குள் லுங்கியைத் தூக்கிக்கட்டியிருப்பதாக நினைத்துக்கொண்டேன். மதுபானம் மணத்தில் விட்டுப்போனதை அதற்கும்மேலாக சுவையில் ஈடுகட்டிவிட்டது என்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பிரகாஷ் சரியான கஞ்சப்பிசுநாரி, மற்றவர்களுக்குத் தருவதைவிட எனக்கு குறைவாகவே ஊற்றினான்.

சிறிது நேரத்தில் நாங்கள் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்த மெயின் ரோட்டில் பனி வெள்ளை பிஎம்டபிள்யூ கார் ஒன்று ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. அதன் டிரைவர் ஹாரனடித்தது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. மவனே, யாருன்னு நெனைச்சான்! தொண்டாங்குப்பம் பெயிண்டர் பாண்டி செத்துப்போனதும் அதற்காக நாங்கள் துக்கம் கொண்டாடுவதும் அவனுக்குத் தெரியாதா  என்ன?

ஊர்ந்துகொண்டிருந்த காரை என் இடுப்பால் மோதினேன். என் கன்னத்தில் எச்சை வழியும் முத்தமொன்றைக் கொடுத்தான் சங்குமணி. அவன்தான் என் உற்றதோழனென்றும் என்னைவிட்டு எப்போதும் பிரியவேமாட்டேன் என்றும் ஒரு நொடிக்குமுன்னர்தான் சொல்லியிருந்தான். நானும் உற்சாகத்தோடு, வேறுவிதமான இச்சைகள் எதுவுமில்லாமல், என் கட்டைவிரலை உயர்த்திக்காட்டியிருந்தேன்.

சத்தமேயில்லாமல் கீழே இறங்கிய பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடி ஜன்னலின் வழியே தெரிந்தது என் மாமியாரின் ஐ.ஏ.எஸ். காலத்திய தற்பெருமைபிடித்த தோழியான  திருமதி மகாதேவனின்  வெறிநாய் போன்ற முகம்.

வாந்தியெடுத்தான் சங்குமணி. கையிலிருந்த கிளாசை திருமதி மகாதேவனிடம் நீட்டினேன் நான். ஜன்னல் கதவை மீண்டும் மேலே ஏற்றிவிட்டார் அவர்.

திரும்பிச்செல்ல மனமேயில்லாமல் ப்ரிபெயிட் ஆட்டோவில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, பிறந்திருக்கவேகூடாத ஒருவனின் ஐம்பதாவது பிறந்தநாளை 5 ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடிவிட்டு வரும்போதோ முதலிரவன்றே திருமணப்பரிசாக வந்த சமையலறைக் கத்தியால் ஒருவருக்கொருவர் தங்கள் துயரக்கதையை முடித்துக்கொண்டிருக்கவேண்டிய தம்பதியரின் இருபதாவது திருமணநாள் விழாவைக் கொண்டாடிவிட்டு வரும்போதோ  ஏன் இதுபோல மகிழ்ச்சியாகவும் களிப்பாகவும் இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

பிரகாஷ் ஏன் இரண்டுநாள் லீவு வேண்டுமென்று கேட்டான் என்று இப்போது புரிந்தது. எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டிருக்கும்.

மொழிபெயர்ப்பு – கார்குழலி ஸ்ரீதர்

Comments